பரியேறும் பெருமாள் விமர்சனம்

பரியேறும் பெருமாள் விமர்சனம்

ரேட்டிங் 4/5  

நீலம் புரொடக்ஷன்ஸ் பா.ரஞ்சித் தயாரிப்பில் பரியேறும் பெருமாள் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் மாரி செல்வராஜ்.

இதில் கதிர், கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து, சூப்பர் குட் சுப்பிரமணி, கராத்தே வெங்கடேஷ், தங்கராஜ்,சண்முகராஜன், பூராம், மெட்ராஸ் ஜானி மற்றும் பலர் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-ஸ்ரீதர், இசை-சந்தோஷ் நாராயணன், படத்தொகுப்பு-செல்வா ஆர்.கே, கலை இயக்குநர்-ராமு, பாடல்கள்- விவேக் மற்றும் மாரி செல்வராஜ், நடனம் -சாண்டி, சண்டை-ஸ்டன்னர் சாம், இணை தயாரிப்பு-சி.வேலன் மற்றும் ஆர். ராகேஷ். பிஆர்ஒ-ஆர்.குமரேசன்.

திருநெல்வேலியில் புளியங்குளத்தைச் சேர்ந்த பரியேறும் பெருமாள் (கதிர்)பாசத்தோடு வளர்க்கும் நாயை வேறு சமூகத்தைத் சேர்ந்த இளைஞர்கள் கொன்று விட, அதைத் தட்டி கேட்க முடியாமல் அவல நிலைக்கு தள்ளப்படுகிறார். தன் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களின் வாழ்க்கை நிலை உயர வக்கிலுக்கு படிக்க பரியேறும் பெருமாள்(கதிர்) சட்டக்கல்லூரியில் சேர்கிறார். அங்கே யோகிபாபு கதிரின் நண்பராகிறார்.கல்லூரியில் ஆங்கிலத்தில் கற்க தடுமாறும் பெருமாளுக்கு(கதிர்) உதவி செய்கிறார் ஜோதி மகாலட்சுமி என்கிற ஜோ (ஆனந்தி). இந்த நட்பைக் கண்டு வெகுண்டெழும் ஆனந்தியின் சமூகம் கதிரை அவமானப்படுத்தி அனுப்புகின்றனர். தனக்கு நேர்ந்த அவமானத்தை கதிர் தன் நண்பன் யோகிபாபுக்கும், ஆனந்திக்கும் சொல்லாமல் மறைக்கிறார். ஆனந்தியிடம் பேசுவதை தவிர்த்து விலகிச் செல்கிறார் கதிர். ஆனால் ஆனந்தி கதிரை விரட்டி விரட்டி காரணம் கேட்க பதில் சொல்லாமல் நழுவுகிறார். இவர்களின் நட்பை காதல் என்றெண்ணி ஆனந்தியின் சமூகம் கதிரை கொலை செய்ய திட்டம் தீட்டுகின்றனர். இந்தக் கொலை வெறித் தாக்குதலிலிருந்து கதிர் தப்பித்தாரா? ஆனந்தி-கதிர் நட்பு காதலானதா? இறுதியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் நச்சென்ற க்ளைமேக்ஸ்.

பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல் (மேலே ஒரு கோடு) என்ற அடைமொழியுடன் கம்பீரமாக சொல்லும் கதிர் தனக்கே உரித்தான கிராமத்து இளைஞனின் வாழ்வியலோடு நடக்கும் கொடுமைகளை பார்த்து கேள்வி கேட்க முடியாமல் மனதிற்குள்; புழுங்கும் ஏழை சராசரி இளைஞனாக வாழ்ந்திருக்கிறார். சமூக வேறுபாடு காரணமாக தனக்கு ஏற்பட்ட அவலங்கள், வேதனைகளை அவமானத்தை தாங்கிக் கொண்டு கோபத்தை அடக்கினாலும் இறுதியில் தன் தந்தைக்கு ஏற்படும் கொடுமையாக செயலைக் கண்டு பொங்கி எழுந்து சீறி வரும் காளையாக கதிர் தீப்பொறி பறக்கும் கண்களோடு ஆக்ரோஷமான நடிப்பில் மெய் சிலிர்க்க வைக்கிறார். பாராட்டுக்கள் இவரின் உயிரோட்டமான நடிப்பிற்கு விருதுகள் பல காத்திருக்கின்றன.
சட்டக்கல்லூரி மாணவி ஜோதி மகாலட்சுமியாக கயல் ஆனந்தி கொஞ்சும் கிளிப்பேச்சோடு, வெள்ளேந்தி குணத்தோடு தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாக கதிரை துரத்தி காதலிக்கும் அப்பாவி கிராமத்து பெண்ணாக அனைவரின் மனதில் இனிய தோழியாக பசை போல் ஒட்டிக் கொள்கிறார்.

யோகி பாபு கதிரின் நண்பராக வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்றாலும், கதிருக்கு பல விதங்களில் உதவிகள் செய்தும், சில இடங்களில் மெல்லிய புன்னகை மலரச் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறார்.

வில்லனாக கராத்தே வெங்கடேஷ் வயதான தோற்றத்தில் தன் சமூகத்தில் வேறு சாதியில் காதலிப்பவர்களை கண்டுபிடித்து வித்தியாசமான தண்டனையை கொடுக்கும் பெரியவராக வரும் காட்சிகளிலெல்லாம் நடுநடுங்க வைக்கிறார்.

கதிரை பழி வாங்க துடிக்கும் சக மாணவராக லிஜீஷ், ஆனந்தியின் அப்பாவாக பாசத்தால் தவிக்கும் மாரிமுத்து, கதிரின் அப்பாவாக ஒரு சீனில் நடித்தாலும் பளீர்ரென்று அறைந்து விட்டு போகிறார் சண்முகராஜன், கல்லூரி முதல்வராக படிப்பின் மரியாதையும், கௌரவத்திற்கும் எடுத்துக்காட்டாக வரும் பூராம், கதிரின் உண்மையான அப்பாவாக வரும் கரகாட்டக்காரர் தங்கராஜ் தத்ரூபமான அற்புதமான நடிப்புக்கு அப்ளாஸ் மற்றும் எண்ணிலடங்கா கிராமத்து முகங்களோடு, கருப்பி நாய் உட்பட அனைவரின் பங்களிப்பு படத்தின் கதையோட்டத்தை திக்குமுக்காட வைத்து விடுகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் சரி, பிண்ணனி இசையும் சரி கிராமத்து யதார்த்தமான சூழலை நம் கண் முன்னே நிறுத்தி மெய் சிலிர்க்க வைத்து விடுகிறார்.
ஸ்ரீதரின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம் மட்டுமல்ல படத்தின் ஒவ்வொரு காட்சிக்கும் அவரின் அபாராமான உழைப்பு தத்ரூபமான காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வர எடுத்த முயற்சிகளுக்கு பாராட்டுக்களும், வெற்றிகளும் குவியும்.

எழுத்து,இயக்கம்-மாரி செல்வராஜ். தன் முதல் இயக்கத்திலேயே தயாரிப்பாளரான பா.ரஞ்சிதிற்கு பெருமை சேர்த்து விட்டார் என்றால் மிகையாகாது. ஒவ்வொரு காட்சிக்குள்ளும் ஒரு கதையளவிற்கு ஆயிரம் அர்த்தங்கள் உள்ளது. சாதி வெறி பிடித்த மனிதர்களால் காதலர்கள் படும் அவல நிலையை பல படங்கள் சொல்லியிருக்கின்றன, ஆனால் தன் தனித்துவமான திரைக்கதையால் சுவாரஸ்யமான ஆனால் ஆழமான அப்பட்டமான காட்சிகளால் அலற வைத்து விடுகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

கருப்பி நாய் மூலம் மனிதர்களின் கொடூர முகத்தை காட்டுவதும், எப்பொழுதுமே கெட்டதே நடக்கும் கதிருக்கும், எப்பொழுதுமே நல்லதே தெரியும் ஆனந்தியும், எந்த எதிர்பார்ப்பும் இல்லாத தன் சமூகத்தை காப்பாற்றுவதாக நினைத்து தான் எடுக்கும் காரியத்தில் தவறு ஏற்பட்டால் உயிரையே மாய்த்து கொள்ளும் சாதி வெறி பிடித்த வயதான பெரியவரும், மகளின் காதலுக்கும், சமூகத்தின் அழுத்தத்திற்கும் பயப்படும் சராசரி தந்தையும், சாதியை மீறிய நட்பும், நட்பால் ஏற்படும் அவமானத்தையும் தாங்கும் சக்தியே பின்னர் காதலாக உருவெடுப்பதும், பெண் வேடம் போட்டு கரகாட்டம் ஆடி குடும்பத்தை காப்பாற்றும் பாசமிகு ஏழைத் தந்தை படும் அவலங்களை, கொடுமைகளை அழுத்தமான காட்சிகளால் தோலுறித்து காட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

வித்தியாசமான கல்லூரிக் கதையை வேறு ஒரு கோணத்தில் காட்டி கனத்த இதயத்துடன் யாரையும் புண்படுத்தாத வண்ணம் ஆழ்ந்த தொலை நோக்கு பார்வையுடன் கொடுத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இறுதிக் காட்சியில் தன் தந்தையை உயர்வாக நினைக்கும் ஆனந்தியின் மனதில் தனக்கு ஏற்பட்ட அவமானத்தை கூறி எந்த களங்கமும் ஏற்படக்கூடாது என்று நினைக்கும் கதிரின் உயர்ந்த உள்ளத்தைக் கண்டு தலை குனியும் மாரிமுத்துவும், மாற்றம் ஏற்பட்டால் தான் விடியல் எற்படும் என்பதை மாரிமுத்து, ஆனந்தி, கதிர் மூன்று பேரும் தூரத்தில் நடந்து போக, அவர்கள் குடித்து வைத்த சாதா டீ டம்ளர், இடையேஒரு மல்லிப்பூ, பக்கத்தில் பிளாக் டீ டம்ளரை காட்டி சிம்பாளிக்காக முடித்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

இக்கதை அன்றாடம் கிராமப்புறங்களில் நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் உண்மையான காரணத்தை காட்சிகளின் கோர்வையாக படம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். வெல்டன் சிறப்பான படத்தை கொடுத்த இயக்குனருக்கு வெற்றிகளும், வாழ்த்துக்களும் விருதுகளும் நிச்சயம் குவியும்.

மொத்தத்தில் வித்தியாசமான கல்லூரி வாழ்க்கையை நேராகவும், மறைமுகமாகவும் காதலை வேறு ஒரு கோணத்தில் கொடுத்து பிரமிக்க வைத்து விடுகிறார் இந்த பரியேறும் பெருமாள்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *