சீமராஜா சினிமா விமர்சனம்

சீமராஜா சினிமா விமர்சனம்

ரேட்டிங் 4/5 

ஜாலியான மாஸ் படம் சீமராஜா

24 ஏ.எம். சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்திருக்கும் சீமராஜா திரைப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பொன்ராம்.

இதில் சமந்தா அக்னினேனி,கீர்த்தி சுரேஷ், சிம்ரன், சூரி, நெப்போலியன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், லால் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ளது சீமராஜா.

தொழில் நுட்ப கலைஞர்;கள்:- ஒளிப்பதிவு-பாலசுப்ரமணியம், இசை-டி.இமான், பாடல்கள்-யுகபாரதி, எடிட்டிங்- விவேக்ஹர்ஷன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா, ரேகா டி.ஒன்.

ஜமீன்தார் முரை ஒழிக்கப்பட்டபோது சிங்கம்பட்டியைச் சேர்ந்த ஜமீன் குடும்பத்தார்கள் தங்கள் நிலங்களையெல்லாம் மக்களுக்கு பிரித்து கொடுத்து விட்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். இந்த பரம்பரையைச் சேர்ந்த சிங்கம்பட்டி ஜமீன் நெப்போலியனின் இளைய வாரிசான சிவகார்த்திகேயன் பழைய மரியாதையுடன் ஊரில் வலம் வருகிறார். பக்கத்து ஊரான புளியம்பட்டியைச் சேர்ந்த லால்-சிம்ரன் தம்பதிகள் சிங்கம்பட்டி சந்தை நடத்த நிலத்தகராறில் சிங்கம்பட்டி நெப்போலியன் குடும்பத்தோடு பகையோடு இருக்கிறார்கள். இதற்கிடையே புளியம்பட்டியைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியையான சமந்தாவுடன் காதல் வசப்படுகிறார். அதே சமயம் புளியம்பட்டியைச் சேர்ந்த லால் சிங்கம்பட்டி ஜமீனில் தானமாக கொடுத்த விவசாய நிலங்களை காற்றாலை நிறுவும் கார்ப்பரேட் நிறுவனத்திற்கு விற்க ஏற்பாடு செய்கிறார். இதனை எதிர்க்கும் சிங்கம்பட்டி நெப்போலியன் தகராறில் இறந்து விடுகிறார். சிவகார்த்திகேயனை காதலிக்கும் சமந்தா லாலின் மகள் என்று தெரிய வருகிறது. அதன் பிறகு சிவகார்த்திகேயன் தன் ஜமீன் பெருமையை உணர்ந்து லால் – சிம்ரன் தம்பதி சதியை முறியடித்து வெற்றி பெற்றாரா? சமந்தாவை மீட்டு திருமணம் செய்து கொண்டாரா? என்பதே வரலாற்று பின்னணி கலந்த மீதிக்கதை.

சீமராஜா-கடம்பவேல்ராஜா என்று இருவேறு கதாபாத்திரங்களில் தனக்கு கொடுத்த பங்கை காதல், காமெடி, சமூக பிரச்னை கலந்து கச்சிதமாக செய்திருக்கிறார். பில்டப் காட்சிகள், பஞ்ச் வசனங்கள், சண்டை காட்சிகள் என்று தன் இமேஜை அடுத்த லெவலுக்கு நகர்த்தி அனைவரையும் தன் நடிப்பில் கவர்ந்திருக்கிறார் என்றால் மிகையில்லை.

சமந்தா உடற்கல்வி ஆசிரியை சுதந்திரசெல்வியாக வந்து சிலம்பம் சுற்றி அழகோடு நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் வந்து போகிறார்.
சூரி ஜமினின் கணக்குப்பிள்ளையாக வந்து காமெடியில் சிவகார்த்திகேயனோடு செய்யும் அலப்பறைகள் தியேட்டரை அதிர வைக்கிறது.

வில்லத்தனத்தில் லாலோடு சேர்ந்து மிரட்டும் சிம்ரன், சிங்கம்பட்டி ஜமீன் மிடுக்கான தோற்றத்தில் நெப்போலியன், யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு படத்தின் கிராமத்து எழிலையும், இரண்டு கிராமத்தின் பகைமை காட்சிகளுக்கும், நாய்-சிறுத்தை காமெடி காட்சிகள், சரத்திர சண்டைக் காட்சிகள், சரித்திரகால அரண்மனைக் காட்சிகள், திருவிழா காட்சிகள் என்று பார்த்து பார்த்து காட்சிக்கோணங்களில் தன் பங்களிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார்.

டி.இமானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே கேட்ட ரகமாக இருந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

விவேக்ஹர்சனின் எடிட்டிங் இன்னும் ஷார்பாக இருந்திருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும்.
எழுத்து, இயக்கம்-பொன்ராம். சிவகார்த்திகேயன்-பொன்ராம் ஆகியோரின் மூன்றாவது கூட்டணி அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்திருக்கிறது. இது காதல், காமெடி, சென்டிமெண்ட், சரித்திர பின்னணி, சமூக அக்கறை என்று அனைத்து அம்சங்களையும் கொண்ட ஒரு முழு நீள படமாக தந்து எல்லா தரப்பு மக்களையும் கவர்ந்து இழுத்திருக்கிறார் இயக்குனர் பொன்ராம். குஸ்தி சண்டை, சரித்திர பின்னணி கொண்ட பிளாஷ்பேக் காட்சிகள் கதைக்கு தேவையில்லாத திணிப்பு. இதை வேறு விதத்தில் சிம்பிளாக காட்டி, படத்தின் நீளத்தை எடிட் செய்திருந்தால் இன்னும் கிரிஸ்ப்பாக இருந்திருக்கும். எப்பொழுதும் போல் சிவகார்த்திகேயன் -பொன்ராம் கமர்ஷியல் காமெடி கலந்த வெற்றி கூட்டணியாக மாறி விட்டதற்கு இந்தப் படம் இன்னுமொரு சிறந்த உதாரணம்.

மொத்தத்தில்  கமர்ஷியல் டிரெட்மார்க்கோடு களம் இறங்கி வெற்றி வாகை சூடியிருக்கும்  ஜாலியான மாஸ் படம் சீமராஜா.

Please follow and like us: