நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

நன்றி தெரிவித்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு இறுதி மரியாதை அளிப்பதற்காகத் திரண்ட தொண்டர்களுக்கும், வருகை தந்த முக்கிய பிரமுகர்களுக்கும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அதன் விவரம்:
திமுக தலைவரை இழந்து கண் கலங்கி நிற்கிறோம். ஒட்டுமொத்த நாடே அவரது மரணத்தால் கலங்கி நின்று இரங்கல் தெரிவித்தபோது, அவரது பேராற்றலும், பெரும் சாதனைகளும் தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை உணர்த்தியது.
திமுக தலைவர், திராவிட இயக்கத்தின் தன்மான உணர்வுகளை போற்றிப் பாதுகாத்தவர். அவருக்கு இறுதி மரியாதை செலுத்திய பிரதமர், மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், அமைச்சர்கள், அனைத்துக் கட்சி அரசியல் தலைவர்கள், தமிழ்ச் சான்றோர், கலைத்துறையினர், பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், தலைவரின் உயிர்காக்கப் போராடிய காவேரி மருத்துவமனை நிர்வாகத்தினர், மருத்துவர்கள் மற்றும் அல்லும் பகலும் மருத்துவமனை வாசலிலேயே இருந்து பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், தலைவரின் உடல்நிலை குறித்த செய்திகளை உடனுக்குடன் வழங்கிய பத்திரிகைகள், ஊடகத் துறையினர் என்று அனைவருக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணாவின் இதயத்தை இரவலாகப் பெற்றவர் கருணாநிதி. தான் திரும்பி வரும்போது அந்த இதயத்தை பத்திரமாக அண்ணாவின் காலடியில் ஒப்படைப்பதாக கவிதை வழியாக உறுதிமொழி அளித்திருந்தார்.
அதை நிறைவேற்ற வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ள நிலையில், மெரீனா கடற்கரையில் அண்ணா சதுக்கத்தில் திமுக தலைவருக்கு இடம் ஒதுக்கக் கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தோம். நேரிலும் சென்று வலியுறுத்தினோம். ஆனால், அண்ணா சதுக்கத்தில் இடம் ஒதுக்க மறுக்கப்பட்டது.
அண்ணாவுக்கு தலைவர் அளித்த உறுதிமொழியை நிறைவேற்றிட உறுதிபூண்டு, சட்டப் போராட்டம் நடத்தி அதில் வெற்றி கண்டுள்ளோம். தலைவர் நிறைவேற்றிய திட்டங்களையும் நிகழ்த்திய சாதனைகளையும் போற்றும் வகையில் அண்ணாவுடன் இணையும் இறுதிப் பரிசு நீதியரசர்களால் வழங்கப்பட்டுள்ளது.

அதற்காக அவர்களுக்கும், கடற்கரையில் நினைவிடங்கள் தொடர்பாக தொடுத்திருந்த வழக்குகளை திரும்பப் பெற்ற நல் உள்ளங்களுக்கும், நீதிமன்றத்தில் போராடிய கட்சி சட்டத் துறையினருக்கும், குறிப்பாக உயர்நீதிமன்ற அமர்வில் அழுத்தம் திருத்தமான வாதங்களை வைத்து நீதி கிடைக்கச் செய்த கட்சியின் சட்டத் திட்ட திருத்த குழு செயலரும், மூத்த வழக்குரைஞருமான வில்சனுக்கும் நன்றி.
மக்கள் கடலாகக் காட்சியளித்த நிலையில், அதை ஒழுங்குபடுத்துவதில் அக்கறை செலுத்திய காவல்துறையினருக்கும், அரசின் ஏற்பாடுகளை செய்த அரசு அதிகாரிகளுக்கும் எனது நன்றி.
மிக சோதனையான காலகட்டத்தில் தலைவர் அவர்களின் லட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது.
ஆகவே, கட்சித் தலைவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிச் செல்லும் தொண்டர்கள் அனைவரும் பத்திரமாக வீடு சென்றடைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஈடு செய்ய முடியாத பேரிழப்பான தலைவரின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்லும் பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் செல்ல வேண்டும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *