காலா சினிமா விமர்சனம்

காலா சினிமா விமர்சனம்

வொண்டர்பார் பிலிம்ஸ் தனுஷ், லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்திருக்கும் படம் காலா.

நானா படேகர்,ஈஸ்வரி ராவ், ஹ{மாகுரேஷி, சமுத்திரகனி, சம்பத் ராஜ், சாயாஜி ஷிண்டே, அஞ்சலி பாட்டீல், மணிகண்டன், திலீபன், பங்கஜ் திரிபாதி, ரவிகாலே, ரமேஷ் திலக், அருள் தாஸ், அர்விந்த் ஆகாஷ், சாக்ஷி அகர்வால், அருந்ததி, சுகன்யா, நிதிஷ் மற்றும் பலர் நடித்துள்ள படத்தை இயக்கியிருக்கிறார் பா.ரஞ்சித்.

தொழில்நுட்ப கலைஞர்;கள்:-ஒளிப்பதிவு-முரளி ஜி, இசை-சந்தோஷ் நாராயணன், எடிட்டிங்-ஸ்ரீகர் பிரசாத், கலை இயக்குனர்-டி.ராமலிங்கம், வசனங்கள்- மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித், ஒலி வடிவமைப்பு-ஆண்டனி பிஜெ ரூபன், சண்டை-திலிப் சுப்பராயன்,பாடல்கள்-கபிலன், உமாதேவி, அருண்ராஜா காமராஜ், அறிவு, நடனம்-பிருந்தா, சாண்டி, ஒலி சேர்ப்பு-சுரேன் ஜி, உடை-அனுவர்தன், சுபிகா, செல்வம், புகைப்படம்-ஆர்எஸ் ராஜா, தயாரிப்பு மேற்பார்வை-எஸ்.பி.சொக்கலிங்கம், ஆர்.ராகேஷ், நிர்வாக இயக்குனர்-எஸ்.வினோத் குமார், பிஆர்ஒ-ரியாஸ் அகமத்.

நெல்லையிலிருந்து மும்பைக்கு வரும் வேங்கையன் அவரது மகன் ரஜினி (காலா என்கிற கரிகாலன்). இவர்கள் மும்பைக்கு வரும் தமிழர்களுக்கு அடைக்கலம், உணவு கொடுத்து தாராவி குப்பத்திற்காக போராடும் தாதாவாக உருமாறுகிறார்கள். ரஜினியின் தந்தை வேங்கையனுக்கும் அரசியல்வாதி நானா படேகருக்கும் பகை உண்டாகிறது. இவர்களை கொல்ல நானா படேகர் ஆட்கள் துரத்தும் போது ஹீமா குரேஷி வீட்டில் தஞ்சமடைகிறார். இதன் மூலம் ஹீமா குரேஷி-ரஜினி நட்பு காதலாக மாற திருமணம் ஏற்பாடகிறது. திருமணத்தன்று ரஜினியின் தந்தை வேங்கையன் கொல்லப்பட்டு மணப்பந்தலில் தீ விபத்து ஏற்பட, திருணம் தடைப்பட்டு ஹ{மா குரேஷி வெளி மாநிலத்திற்கு குடும்பத்துடன் சென்று விடுகின்றனர். அதன் பின் தாராவியில் ரஜினியின் செல்வாக்கு உயர்ந்து இவர் சொல்லுக்கு குப்பத்து மக்கள் கட்டுப்பட்டு வாழ்கின்றனர். ரஜினி ஈஸ்வரி ராவை திருமணம் செய்து கொண்டு நான்கு பிள்ளைகளுடன் ஒரே வீட்டில் தாராவியில் வசிக்கிறார்.

தாராவி பகுதியை தூய்மையான இந்தியா திட்டத்தின் கீழ் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அரசியல்வாதி சம்பத் அடிக்கல் நாட்ட வருகிறார். இந்த திட்டத்தால் நிலம் அபகரிப்பதோடு, வியாபார நோக்கத்தால் பலபேருக்கு வீடு கிடைக்காமல் போகும் என்பதை அறிந்து ரஜினியின் மகன் நெல்சன் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க திட்டம் கைவிடப்படுகிறது. தேர்தலிலும் தாராவியில் தோல்வியை சந்திக்கும் சம்பத்தை ஒரங்கட்டி அரசியல்வாதி நானா படேகர் (ஹரிதாதா) ரஜினியை Pவீழ்த்த சபதமெடுக்கிறார். முன்னால் காதலி ஹ{மா குரேஷி தாராவியில் குடிசை பகுதியில் மாற்றம் கொண்டு வர வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு திரும்பி வருகிறார். அரசியல்வாதி நானா படேகருடன் ஹ{மா குரேஷி தாராவியில் அடுக்கு மாடி கட்ட முதலில் கை கோர்த்தாலும் பின்னர் அவரின் வஞ்சக எண்ணம் அறிந்து விலகிக் கொள்கிறார். நானா படேகர் ரஜினியை பல விதங்களில் முயன்று இத்திட்டத்திற்காக பணிய வைக்க முயல பிடி கொடுக்காமல் எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினியை கொல்ல திட்டமிடும் போது எதிர்பாராத விதமாக மனைவி ஈஸ்வரி ராவும், மகன் திலீபனும் இறந்து விடுகின்றனர். இதன் பிறகு ரஜினிக்கும், நானா படேகருக்கும் நடக்கும் யுத்தம் வெற்றி பெற்றதா? என்பதே போராட்ட களமாக முடிந்திருக்கும் காலாவின் மீதிக் கதை.

கரிகாலக்-காலாவாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் அமைதியான, ஆர்ப்பாட்டமான, ஆக்ரோஷமான, ஸ்டைலான நடிப்பு காட்சிக்கு காட்சி மெருகேற்றி அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். முன்னாள் காதலி, அதை அறிந்த முகம் சுளிக்காத ஆசை மனைவி ஆகியோருடன் இருக்கும் காதல் உணர்வை வெளிப்படுத்தும் விதம், முரண்பட்ட மகனும், உதவியாக இருக்கும் முரண்டு பண்ணாத மகனையும் சமாளிக்கும் விதம், குடும்பத்தை அதட்டி ஆளும் விதம், அரசியல்வாதியிடம் எந்த நேரத்தில் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்பதை பக்குவமாக கையாளும் விதம் அருமை. இறுதிக் காட்சியில் ராவணனாக சித்திரிக்கப்பட்டு நிலத்தை அபகரிக்க நினைப்பவர்களை போராடி வெல்வதை முழு படத்தையும் தன் தோலில் சுமந்து கச்சிதமாக சிறப்புற செய்திருக்கிறார்.

ஹரி தாதாவாக இந்தி நடிகர் நானா படேகர் அரசியல்வாதி வில்லனாக முக்கியமான கதாபாத்திரம். கதாநாயகன் ரஜினி என்றால் அவருக்கு சரி சமமாக தன் பங்களிப்பை நிதானமாக டயலாக் டெலிவரியிலும், கண்ணாடிகளுக்கிடையே ஊடுருவும் தீர்க்கமான பார்வையில் வெள்ளை ஜிப்பாவில் அதிகார தோரணையை காட்டி மிரட்டி பணிய வைக்கும் முயலும் பவர்புல் வில்லனாக கதையின் நாயகனாக ஜொலிக்கிறார்.

ஈஸ்வரி ராவ் வெகுளித்தனமாக வாயாடும் ரஜினியின் மனைவி செல்வியாக, முரணான மகன்களை அரவணைத்து செல்லும் தாயாக, கணவனின் முன்னாள் காதலியை வரவேற்றாலும், இடையிடையே இடித்துரைக்கும் பாங்கு, காதல் பொங்க ஐ லவ் யூ சொல்லும் கணவனை பார்த்து பூரித்து வெட்கப்படுவதும், கணவனைச் சுற்றியே தன் வாழ்க்கையை வாழ்ந்து அவருக்காகவே தன் உயிரையும் கொடுக்கும் அற்புதமான கதாபாத்திரம்.

காலாவின் முன்னாள் காதலி கதாபாத்திரத்தில் ‘சரீனா’வாக வலம்வருகிறார் ஹுமா குரேஷி. உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

ரஜினிக்கு வலது கரமாக வரும் குடிகார சமுத்திரகனியை எப்பொழுதும் ஆரவார வசனங்கள் பேசியே பார்த்து விட்ட நமக்கு இதில் இவரை குடிபோதையிலேயே ஒன்லைன் வசனம் பேச வைத்திருப்பது மனதில் ஒட்டவில்லை. குடிகார சமுத்திரகனியை பார்க்க முடியவில்லை.

அஞ்சலி பாட்டீல் மகாராஷ்டிரா பெண்ணாக உரிமைகளுக்கு வீரவேசமாக குரல் கொடுத்து போராடும் இடத்திலும் சரி, போலீசிடம் சிக்கி சின்னாபின்னாமாகி தன் உடையை இழந்தாலும் போராடி ஒடி வந்து கிழே கிடக்கும் உடையா? லத்தியா? எதை எடுப்பது என்று ஒரு நோடியில் லத்தியை எடுத்து போலீசை விலாசும் அந்த வினாடி கை தட்டல் பெறுகிறார்.

சம்பத் ராஜ், சாயாஜி ஷிண்டே, மணிகண்டன், திலீபன், பங்கஜ் திரிபாதி, ரவிகாலே, ஊடகவியலராக ரமேஷ் திலக், அருள் தாஸ், அர்விந்த் ஆகாஷ், நிதிஷ், மருமகள்களாக சாக்ஷி அகர்வால், அருந்ததி, சுகன்யா மற்றும் மற்ற துணை கதாபாத்திரங்கள் படத்தில் முக்கிய பங்கு வகித்து படத்தின் விறுவிறுப்புக்கு துணை போகிறார்கள்.

ஒளிப்பதிவு-முரளி ஜி. மும்பை தாராவி செட்டை அச்சு அசலாக கண்களுக்கு கொடுத்து, சந்தோஷம்-துக்கம் இரண்டையும் சரிசமாக காட்சிப்படுத்தி, அரசியல்வாதியின் வீடு, போலீஸ் ஸ்டேஷன், சண்டைக் காட்சிகள், போராட்டங்களையும், ரஜினியின் இளமைக்கால நிகழ்வுகளை வரைப்படங்கள் மூலம் காட்சிப்படுத்தி அனைத்து நிகழ்வுகளையும் தன் காட்சிக் கோணங்களால் அதிர வைத்திருக்கிறார்.

இசை-சந்தோஷ் நாராயணன். பாடல்களை மட்டுமல்ல, பின்னணி இசையிலும் ரசிக்க வைக்கிறார்.

டி.ராமலிங்கத்தின் கலை-கை வண்ணத்தில் எந்த இடத்திலும் செட் என்று தெரியாத வண்ணம் நிழலை நிஜமாக்கி அசர வைத்திருக்கிறார்.

மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, ரஞ்சித் ஆகியோரின் வசனங்கள் தீப்பொறியாக இருக்கிறது.

எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கத்தரி போட்டிருக்கலாம்.

இயக்கம்-பா.ரஞ்சித். நிலம் எங்கள் உரிமை அதை எந்த சூழ்நிலையிலும் விட்டுத் தர மாட்டோம் என்ற மெசெஜை முப்பை தாராவி பகுதியை மையமாக வைத்து கமல் நடித்த நாயகன் பாணியில் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறார். இதில் வெற்றி பெற்றது ரஜினியா? ரஞ்சித்தா? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. ரஜினிக்காக ரஞ்சித் படம் பண்ணவில்லை. தன் கொள்கைகளை சொல்ல வாய்ஸ் மெசஞ்சராக ரஜினியை பயன்படுத்தியிருக்கிறார் பா.ரஞ்சித். இன்றைய அரசியல் சூழ்நிலையும், போராட்டங்களும் இந்த படத்தின் வசனங்களுடன் சின்க் ஆவதால் ரஜினிக்கு எதிர்மறை குரல்கள்தான் வலுப்பெற்றிருக்கிறது. இதன் மூலம் ரஜினி தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொள்ள பா.ரஞ்சித் தான் காரணம். அதுமட்டுமல்ல தாராவியை கட்டி ஆளும் ரஜினி அந்த குப்பத்து மக்களின் உரிமையான நிலத்திற்காக போராடுவது ஒரு புறம் இருந்தாலும், அவர்களின் வாழ்வாதாரத்திற்கும், சூழ்நிலையை மாற்றுவதற்கும் எந்த ஒரு முயற்சியும் எடுக்காமல் ஒரு முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பது நெருடலாக இருக்கிறது.அது மட்டுமில்லாமல் தாராவி மக்கள் போராட்டத்துடனேயே எதிர்ப்பது போல் முடித்திருப்பது கதை முற்றுப்பெறாமல் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதி காதல், குடும்ப செண்டிமெண்ட் என்று கதை நகர இரண்டாம் பகுதி அரசியல் சதுரங்க ஆட்டம், பழி வாங்குதல் என்று முடித்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். பழைய மொத்தையில் புதிய கள் இந்த காலா.

மொத்தத்தில் ரஜினி ரசிகர்களை மட்டும் என்றுமே ஏமாற்றாது கை விடாது இந்த காலா.

Rating: 3.5/5

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *