காளி சினிமா விமர்சனம்

காளி சினிமா விமர்சனம் (3/5 ***)

விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் வெளிவந்திருக்கும் காளி படத்தை இயக்கியிருக்கிறார் கிருத்திகா உதயநிதி.

இதில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதன்ராவ், கி;ருஷ்ணமூர்த்தி, ஜெயராவ், சித்ரா லட்சுமண் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ரிச்சர்ட் எம்.நாதன், இசை-விஜய் ஆண்டனி, பாடல்கள்-மதன் கார்க்கி, விவேக், அருண் பாரதி, தமிழணங்கு, எடிட்டர்-லாரன்ஸ் கிஷோர், கலை-சக்தி வெங்கட்ராஜ் எம், சண்டை-ஆர்.சக்தி சரவணன் , நடனம்-பிருந்தா, உடை-கவிதா, ரோஹித், சாரங்கன், ஸ்டில்ஸ்-முத்தையா, தயாரிப்பு மேற்பார்வை-ஆர்.ஜனார்த்தனன் ,நிர்வாக இயக்குனர்-எம்.சிவகுமார், தயாரிப்பு மேலாளர்-கே.மனோஜ்குமார், தயாரிப்பு நிர்வாகி-சாண்ட்ரா ஜான்சன், பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.

அமெரிக்காவில் சொந்தமாக பெரிய மருத்துவமனை நடத்தும் பிரபல டாக்டர் பரத் (விஜய் ஆண்டனி). தினமும் கனவில் சிலசம்பவங்கள் தொடர்ந்து தொந்தரவு தர இதற்கான காரணம் புரியாமல் பரத் தவிக்கிறார். இதனிடையே அமெரிக்கா பெற்றோர்கள் தன்னை எடுத்து வளர்த்தவர்கள் என்பதைஅறிகிறார். தன் உண்மையான தாய், தந்தையைத் தேடி இந்தியாவிற்கு பயணமாகிறார். தமிழ்நாட்டில் ஆசிரமத்தில் சென்று விசாரிக்க தாய் பார்வதி இறந்து விட்டார் என்றும் ஊர் கனவுக்கரை என்றும் தகவல் கிடைக்கிறது.இந்த தகவலை வைத்துக் கொண்டு கனவுக்கரையில் தந்தையை கண்டுபிடிக்க டாக்டர் காளியாக தன் பணியை தொடங்குகிறார். இவரின் தேடுதலுக்கு கோபி (யோகி பாபு) பல விதங்களில் உதவி செய்கிறார். முதலில் ஊர்தலைவர் பெரியசாமி(மதுசூதன் ராவ்), திருடன் மாரி (நாசர்) ஆகியோரை விசாரிக்க இவர்களின் காதல் கதைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதை உணர்கிறார். அதன் பின் ரத்த பரிசோதனை முகாமை நடத்தி அதில் தன்னுடைய டிஎன்ஏ ஒத்து போகிறதா என்று முயற்சி செய்து பார்க்கிறார். இதில் வெற்றி பெற்றாரா? தன் தந்தையை கண்டு பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

காளி, பரத் என்று இரு பெயரில் விஜய் ஆண்டனி டாக்டராக வந்து அதன் பின் தன் தந்தையை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஊர்த்தலைவர், திருடன், பாதிரியார் இவர்களின் இளமை கதாபாத்திரத்தில் தோன்றி புது முயற்சியை கையாண்டிருப்பது புதுமை. இதில் திருடன் கதாபாத்திரம் தான் நச்சென்று மனதில் பதியும்படி செய்து எப்பொழுதும் போல் முத்திரை பதித்து செல்கிறார்.

அஞ்சலி நாட்டு வைத்தியராக கலகலவென்று வந்து போகிறார். சுனைனா ஏழைகளுக்கு உதவும் பாதிரியாருக்கு உறுதுணையாக வந்து இயல்பான நடிப்பை தந்திருக்கிறார். வறுமை காரணமாக முதியவருக்கு வாழ்க்கைப்பட்டு விரக்தியில் இருக்கும் கதாபாத்திரம் வீரத்திலும், திமிராலும், அழகாலும் வசியம் செய்து மனதில் நிற்கிறார் ஷில்பா மஞ்சுநாத். கல்லூரி மாணவி அம்ரிதாவின் நடிப்பு கச்சிதம்.

யோகி பாபு தனக்கான மேனரிசத்தையும், ஒன் லைன் காமெடி பஞ்ச் வசனம் காட்சிகளுக்கு இடையிடையே தந்து முதல் பாதியை நகைச்சுவையோடு தோய்வு ஏற்படாமல் நகர்த்தி செல்ல வழி செய்கிறார்.

வேல ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ், நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதன் ராவ், கிருஷ்ணமூர்த்தி, ஜெயராவ், சித்ரா லட்சுமணன் ஆகியோர் துணை கதாபாத்திரங்களாக காட்சிக்கு வலு சேர்க்கிறார்கள்.

ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு 80 கால கட்டத்தையும், இன்றைய காலத்தையும் இணைக்கும் பாலமாக ரிச்சான காட்சிக்கோணங்களும் அனைவருக்கும் ரீச் ஆகும் வகையில் சிறப்பாக கொடுத்திருப்பதோடு, கனவில் வரும் பாம்பு, மாடு, குழந்தை, தாய் வரும் காட்சிகள் தத்ரூபமாகவும், பாழடைந்த தொழிற்சாலை,அடர்ந்த காட்டுப்பகுதி, குடிசை, சர்ச், வீடுகள், கிளினிக் என்று காலத்திற்கேற்ப வேறுபடுத்தி காட்சிகளை கொடுத்து கை தட்டல் பெறுகிறார் ரிச்சர்ட் எம்.நாதன்.

விஜய் ஆண்டனியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

யக்கம்-கிருத்திகா உதயநிதி. தந்தையை தேடிக் கண்டுபிடிக்கும் மகனின் கதையை தன்னுடைய பாணியில் வித்தியாசமான கோணத்தில் மூன்றுவித கிளைக்கதைகளை இணைத்து இதில் காதல், சென்டிமெண்ட், சண்டை, வன்மம், சமூக பிரச்னைகளை அழகாக காட்சிப்படுத்தி இருந்தாலும் சம்பவங்களின் பிரச்னைகளை இன்னும் அழுத்தம் கொடுத்திருந்தால் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கும். இருந்தாலும் இயக்குனர் கிருத்திகா உதயநிதியின் உழைப்பிற்கும், முயற்சிக்கும் பாராட்டுக்கள்.

மொத்தத்தில் பெற்றோரை தேடும் முயற்சியில் ஜெயித்தாரா காளி பொருத்திருந்து பார்க்கலாம்.

RATING *** 3/5

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *