செயல் சினிமா விமர்சனம்

செயல் சினிமா விமர்சனம் (*** 3/5)

சி.ஆர்.ராஜன் தயாரிப்பில் செயல் படத்தின் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதி இயக்கியிருக்கிறார் ரவி அப்புலு.

ராஜன் தேஜஸ்வர், தருஷி, ரேணுகா, முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா, சமக் சந்திரா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள படம் செயல்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-வி.இளையராஜா, இசை-சித்தார்த் விபின், எடிட்டிங்-ஆர்.நிர்மல், பாடல்கள்-லலிதானந்த், ஜீவன் மயில், ஸ்டன்ட்-கனல் கண்ணன், நடனம்-பாபா பாஸ்கர், ஜானி, கலை-ஜான் பிரிட்டோ, தயாரிப்பு நிர்வாகம்-ஏ.பி.ரவி, பிஆர்ஒ-மௌனம் ரவி.
கேரளாவில் வேலை செய்யும் ராஜன் தேஜஸ்வர் விடுமுறையில் தன் தாயை பார்க்க வடசென்னைக்கு வருகிறார். அங்கே மார்க்கெட்டில் தன்னை வம்புக்கு இழுக்கும் தாதா சமக் சந்திராவை புரட்டி போட்டு அடித்து விட்டு கேரளாவிற்கு சென்று விடுகிறார். அதன் பின் தாதா சமக் சந்திராவிற்கு மார்க்கெட்டில் மதிப்பும், மரியாதையும், பயமும் இல்லாமல் போக வசூலும் பாதிக்கிறது. தன்னை அடித்த ராஜன் தேஜஸ்வரை அதே மார்க்கெட்டில் வைத்து அடித்து இழந்த மதிப்பை பெற வேண்டும் என்று தாதா சமக் சந்திரா சபதம் போடுகிறார். அதற்காக ராஜன் தேஜஸ்வரை நயமாக பேசி வரவழைக்க நினைத்து போனில் அழைக்க அவர் கேரளாவில் இருப்பதை அறிந்து சென்னைக்கு வருமாறு தாதா சமக் சந்திரா வற்புறுத்துகிறார். ஆனால் ராஜன் வர மறுக்க தன்னுடன் இருக்கும் அடியாட்கள் இரண்டு பேரை கேரளாவிற்கு சென்று அழைத்து வருமாறு அனுப்புகிறார். அவர்கள் இருவரும் சமரசமாக ராஜன் தேஜஸ்வரின் காதலை சேர்த்து வைத்து சென்னைக்கு அழைத்து வருகின்றனர். இதன் பின் சென்னையிலிருந்தும் பல காரணங்களால் இவர்கள் இருவரின் சந்திப்பு தடைபடுகிறது. இறுதியில் தாதா சமக் சந்தரா தன்னை அடித்த ராஜன் தேஜஸ்வரை மார்க்கெட்டில் வைத்து பழி தீர்த்தாரா? தன் சபதத்தை நிறைவேற்றினாரா? என்பதே கலகலப்பாக செல்லும் க்ளைமேக்ஸ்.

புதுமுகம் ராஜன் தேஜேஸ்வர் காதல், சண்டை, சென்டிமெண்ட் என்று கைதேர்ந்த நடிகர் போல் சிறப்பாக நடித்திருந்தாலும் அவருடைய வசன உச்சரிப்பை சரி செய்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

ரேணுகா எப்பொழுதும் போல் லகலகவென்று பேசியே தன் பங்கை நிறைவு செய்திருக்கிறார். தருஷி அழகுப் பதுமையாக வந்து போகிறார்.

சமக் சந்திரா வில்லனாக மட்டுமில்லாமல் படம் முழுவதும் இறுக்கமான முகத்துடன் முரட்டு தோற்றத்துடன் வந்தாலும், சுற்றிருப்பவர்கள் அவரை வைத்து காமெடி செய்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் இறுதி வரை தாதா என்ற பில்டப்பை விடாமல் அசத்தலாக செய்து கை தட்டல் பெறுகிறார்.

முனீஸ்காந்த், சூப்பர் குட் சுப்பிரமணியம், வினோதினி, தீப்பெட்டி கணேசன், ஆடுகளம் ஜெயபாலன், தீனா ஆகியோரின் பாத்திரப்படைப்பு படத்திற்கு கூடுதல் பலம்.

வி.இளையராஜாவின் ஒளிப்பதிவும், சித்தார்த் விபினின் இசையும் படத்திற்கு ப்ளஸ்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-ரவி அப்புலு. ஷாஜகான் படத்தை இயக்கிய ரவி அப்புலு, புதுமுகங்களை வைத்து வடசென்னை தாதா கதையை காமெடி, சென்டிமென்ட், சமூக அக்கறை கலந்து நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் காட்சிகளை அமைத்து தனித்தன்மையோடு இயக்கியிருக்கிறார். வட சென்னையில் நடக்கும் சம்பவங்கள் இந்த படத்தில் மாறுபட்டு வித்தியாசமான கோணத்தில் முதலில் சீரியஸாக ஆரம்பிக்கும் கதை, பிறகு காமெடி களமாக மாறி தோய்வில்லாமல் செல்வதிலேயே படத்தை ரசிக்க வைத்து சிரிக்க வைத்து ஜெயித்திருக்கிறார் இயக்குனர் ரவி அப்புலு. படிப்பில் ஆர்வம் இருக்கும் ஏழை மாணவர்களை ஊக்கப்படுத்தி அவர்களின் ஆசையை பூர்த்தி செய்ய உதவி செய்தால் அவர்களும் அதே போல் பல மாணவர்களை வழி நடத்துவார்கள் என்பதை சமூக விழிப்புணர்ச்சியோடு கலகலப்புடன் சொல்லிருப்பது அற்புதம்.

மொத்தத்தில் வடசென்னைக் கதையை காமெடி கலந்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் ‘செயல்”படுத்தியிருக்கிறார்கள்.

RATING *** 3/5

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *