நடிகையர் திலகம் சினிமா விமர்சனம்

நடிகையர் திலகம் சினிமா விமர்சனம்

Rating **** 4/5

வைஜயந்தி மூவி தயாரிப்பில் ஸ்வப்னா சினிமாவின் நடிகையர் திலகம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் நாக் அஸ்வின்.
இதில் கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா அக்கினேனி, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே, ஸ்ரீனிவாஸ் அவசரளா, க்ரிஷ் ஜகர்லாமுடி ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-டானி சாலோ, வசனம்,பாடல்கள்-கார்க்கி, இசை-மிக்கி ஜெ.மேயர், எடிட்டிங்-கோடகிரி வெங்கடேஸ்வர ராவ், உடை-கௌரங், அர்ச்சனா ராவ், இந்திராக்ஷி பட்னாயக், கலை-தோட்டாதரணி, அவினாஷ் கொல்லா, ஒலி-ரகு காமிஷெட்டி, பப்ளிசிட்டி-ராம் பெடிட்டி, ஸ்டில்ஸ்-அபினவ்கோடம்குமார்,கதை ஆலோசகர்-ருதம் சமர், நடனம்-அனி, விஷ்வகிரண் நம்பி, மனிதா ப்ரவீணா, பிஆர்ஒ-நிகில்.
கோமா நிலையில் ஆதரவில்லாமல் மருத்துவமனையில் கிடக்கும் சாவித்திரியின் வாழ்க்கையை எழுத முதலில் தயங்கினாலும் பிறகு ஈடுபாட்டுடன் எழுத வருகிறார் பத்திரிகையாளர் சமந்தா. அவரின் பார்வையில் சாவித்திரியின் வாழ்க்கை பல கோணங்களில் பல மனிதர்களை சந்தித்த பிறகு சாவித்திரியின் கதையை எழுத தொடங்குகிறார்.
விஜயவாடாவில் சிறு வயதில் விதவை தாயுடன் பெரியப்பா ஆதரவுடன் நடனம், பாட்டு, இளமை துள்ளல் குறும்புடன் நாடக மேடையில் ஜொலிக்கிறார். நாடகத்தில் போதிய வருமானம் இல்லாததால் சென்னைக்கு நடிக்க பல ஸ்டியோக்களை ஏறி இறங்கும் தருணத்தில் புகைப்பட கலைஞராக இருக்கும் ஜெமினி கணேசனை சந்திக்கிறார். சாவித்திரியின்;, வெகுளித்தனமும் வெகுவாக கவர அவரின் புகைப்படத்தை பத்திரிக்கையில் வெளிவரச் செய்கிறார் ஜெமினி கணேசன். இதன் பிறகு சாவித்திரிக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. முதலில் நடிக்க வரவில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டாலும் தன் முயற்சியாலும், திறமையாலும் ஜெமினி கணேசனின் உதவியாலும் மொழிகளை கடந்து நடிப்பில் படிப்படியாக உயர ஆரம்பிக்கிறார். ஆரம்பத்தில் புகழின் உச்சிக்கு செல்வதற்கு முன்பே ஏற்கனவே திருமணமான ஜெமினிகணேசன் சாவித்திரியை வற்புறுத்தி சமாதானம் செய்து திருமணம் செய்து கொள்கிறார். இதை மறைத்து இருவரும் நடிப்பில் கவனம் செலுத்த இருவரின் வெற்றிகளும் கை கூடுகிறது.
இதனிடையே இவர்களின் திருமண விவகாரம் குடும்பத்தார் முதல் அனைவருக்கும் தெரிய வர பகிரங்கமாக திருமணம் செய்து கொண்டு தனிக்குடித்தனம் நடத்துகிறார்கள். குழந்தைகள் பிறந்து சந்தோஷமாகவும், ஆடம்பரமாகவும் வாழ்க்கை இனிதாக செல்லும் நேரத்தில் ஜெமினி கணேசனுக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்க சாவித்திரிக்கு மட்டும் படங்கள் குவிகிறது. தமிழ், தெலுங்கில் உள்ள உச்ச நடிகர்கள் அனைவரும் சாவித்திரியின் கால்ஷ{ட்டிற்காக காத்துக் கிடக்கிறார்கள். இதனால் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டு ஜெமினி கணேசனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட சாவித்திரிக்கு மன உளைச்சல் ஏற்படுகிறது. இதிலிருந்து மீள ஜெமினி கணேசன் குடிக்கச் தொடங்க சாவித்திரியையும் குடிப்பழக்கத்திற்கு ஆளாக்குகிறார். இந்நிலையில் சாவித்திரியின் இளகிய மனதை புரிந்து கொண்டு பலர் படம் இயக்க வற்புறுத்துகின்றனர். இந்த துண்டுதலால் சாவித்திரி படத்தை தயாரித்து இயக்கி பெரும் நஷ்டம் அடைகிறார். இதனிடையே ஜெமினி கணேசனுக்கு இன்னொரு பெண்ணிடம் பழக்கம் ஏற்பட இதை காணும் சாவித்திரி அதிர்ச்சிக்குள்ளாகிறார்.
அதன் பிறகு ஜெமினிகணேசனிடமிருந்து விலகி தனிமையிலும் விரக்தியிலும் குடி போதைக்கு அடிமையாக, சம்பாதித்த சொத்து,பணம் முழுவதும் நஷ்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்கவே செலவாகிறது. இறுதியில் குடியால் நோய்வாய்ப்பட்டு பணம் இல்லாமல் குழந்தைகளுடன் கஷ்டப்படும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார். பட வாய்ப்பும் கிடைக்காமல் போக சிறு வேடத்தில் நடிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகிறது. இறுதியில் கோமா நிலைக்கு சென்று விடும் சாவித்திரி பத்தொன்பது மாதங்களுக்குப்; பிறகு இறந்து விடுகிறார். இந்த கதையை எழுதும் சமந்தாவிற்கு சாவித்திரியின் இளகிய மனதும், கொடை பண்பும் தெரிய வருகிறது. இதனை வெளிஉலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் சமந்தாவிற்கு உதவி செய்யும் புகைப்பட கலைஞர் விஜய் தேவரகொண்டாவின் காதலும் கை கூடியதா? சாவித்திரியின் கடைசி ஆசை நிறைவேறியதா? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
கீர்த்தி சுரேஷ் சாவித்திரியின் நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் நிழலாக படத்தில் தோன்றினாலும் இதனை மறக்கச் செய்யும் அளவிற்கு குறை சொல்ல முடியாத சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார். சாவித்திரியின் உடையலங்காரம், ஒப்பனை, நடை, உடை, பாவனை சிறிதும் மாறாமல் வசனத்திலும், உச்சரிப்பிலும் அசத்தினாலும் தெலுங்கு வாசம் அதிகமாக வீசுவதை தவிர்த்திருக்கலாம். சாவித்திரியின் புகழ் வெளிச்சத்திற்கு மறுபக்கம் உள்ள மனதை நெருடச் செய்யும் வாழ்க்கை வரலாறு படம் பார்ப்போரை இறுதியில் கண் கலங்கச் செய்கிறது என்பது நிஜம்.
துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக வாழ முற்பட்டாலும் படத்தில் ஒன்றவில்லை என்றாலும் சாவித்திரியின் எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் காரணகர்த்தா என்ற நிலையில் முக்கியமான கதாபாத்திரம் காதல் மன்னனாக முடிந்தவரை நடிப்பால் ஈடு செய்கிறார்.
பத்திரிகையாளராக சமந்தா சாவித்திரியின் கதையை சொல்வதற்குள் இடையிடையே விஜய் தேவரகொண்டாவுடன் இருக்கும் காதலையும் அழகாக வெளிக்காட்டியிருக்கும் விதம் சிறப்பு.
மற்றும் ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், பானுப்பிரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே, ஸ்ரீனிவாஸ் அவசரளா, க்ரிஷ் ஜகர்லாமுடி என்று நட்சத்திர தெலுங்கு பட்டாளம் படத்திற்கு பக்கமேளம்.
ஒளிப்பதிவு-டானி சா லோ காட்சிக் கோணங்கள் 80களின் காலக்கட்டத்தையும், அதற்கு முன் இருந்த கிராமத்து சூழல், டிராம் வண்டி, விஜயா-வாஹினி ஸ்டியோஸ், பேருந்து, படப்பிடிப்பு தளங்கள், கார்கள்,காதல் காட்சிகள், பாடல் காட்சிகள், மெட்ராஸ் சென்ட்ரல், காமிரா, வீடுகள், வீதிகள் என்று கால கட்டத்திற்கேற்ப வண்ணத்தில் அசத்தியிருக்கிறார்.
மிக்கி ஜெ.மேயரின் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைத்து தாளம் போட வைக்கிறது.
தோட்டாதரணி, அவினாஷ் கொல்லா ஆகியோரின் கைவண்ணத்தில் கடுமையான உழைப்பில் உருவான செட்கள் ஆச்சர்யப்படுத்துகிறது.
மதன் கார்க்கியின் வசனம், பாடல்கள் படத்திற்கு பலம்.
எழுத்து, இயக்கம்-நாக் அஸ்வின். தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் தமிழில் நடிகையர் திலகமாக வெளி வந்துள்ள உன்னதப்படம். நடிப்புலகில் சாதனை பெண்மணியாக சகாப்தம் படைத்த சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு ஒரு பக்கம் மகிழ்ச்சியாக பலருக்கு தெரிந்தாலும் மறு பக்கம் சோகத்தின் உச்சமாக வாழ்ந்த வாழ்க்கை மனதை நெகிழச் செய்கிறது மட்டுமில்லாமல் சாவித்திரியைப் பற்றி அறிந்திராதவர்கள் கூட அவரின் பெருமையை உணரச் செய்து முழு முயற்சியில் கடின உழைப்பால் சேகரித்த தகவல் களஞ்சியமாக பொக்கிஷமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். இறுதியில் கனத்த இதயத்துடன் கண் கலங்க வைத்து விடுகிறார் இயக்குனர் நாக் அஸ்வின்.
மொத்தத்தில் மனதை விட்டு என்றும் நீங்காத ஈகை குணம் நிறைந்த நடிகையர் திலகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *