இரும்புத்திரை சினிமா விமர்சனம் (4/5)

இரும்புத்திரை சினிமா விமர்சனம்

விஷால் பிலிம் பாக்டரி சார்பில் விஷால் தயாரித்து லைகா பிரொடக்ஷன்ஸ் வெளியீட்டில் வந்துள்ள படம் இரும்புத்திரை.

இதில் விஷால், அர்ஜுன், சமந்தா, டெல்லி கணேஷ்,ரோபோ சங்கர், விஜய் வரதராஜ், சாண்டி, ஷியாம், சரத்ரவி, தர்ஷனா, அப்துல், வின்சன்ட் அசோகன், மதுசூதனன்ராவ், சுமன்,காளி வெங்கட், மாரிமுத்து, மகாநதி ஷங்கர், ஜெரிமி, பிரதீப் கே.விஜயன், சயத் ஆகியோர் நடித்து பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கியிருக்கும் படம் இரும்புத்திரை.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை-யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு-ஜார்ஜ் சி வில்லியம்ஸ், வசனம்-எம்.ஆர்.பொன்பார்த்திபன், சவரிமுத்து, ஆன்டனி பாக்யராஜ், பாடல்கள்-விவேக், விக்னேஷ் சிவன், கபர் வாசுகி, எடிட்டிங்-ரூபன், கலை-உமேஷ் ஜெ.குமார், சண்டை-திலீப்சுப்ராயன், நடனம்-கல்யாண், தஸ்தா, அனுஷாசாமி, உடை-சத்யா, என்.ஜெ.நீரஜா கோனா, ஜெயலட்சுமி, ஷெர் அலி, ஒப்பனை-முருகதாஸ்.எஸ், தயாரிப்பு அதிகாரி-ஏ.ஆர்.சந்திரமோகன், தயாரிப்பு மேற்பார்வை-கிம்பர்ளி செந்தில், தயாரிப்பு நிர்வாகி-பிரவீன் டேனியல், தமிழ்நாடு வெளியீடு-க்ரிக்ஸ் சினி கிரியேஷன்ஸ், ஸ்ரீதரன் மரியாதாசன், மக்கள் தொடர்பு ஜான்சன்.

சிறு வயதில் தன் தந்தையின் கடன் பாக்கியாலும், தாயின் இறப்பாலும் மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறி கஷ்டப்பட்டு ராணுவத்தில் சேர்ந்து உயர் பதவியில் இருக்கிறார் கோபக்கார ராணுவ அதிகாரியான மேஜர் ஆர். கதிரவன்(விஷால்). இவரின் ஒரே லட்சியம் வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பதே. இந்த நேரத்தில் மாமா விநாயகம்(ரோபோ சங்கர்) வீட்டு அருகில் சிறு தகராறு ஏற்பட்டு அடிதடியில் முடிய இந்த புகாரால் ராணுவ மேலதிகாரி கதரவனை சிறந்த மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று கோபத்தை குறைத்து நற்சான்றிதழ் பெற்று வந்தால் தான் பணியில் சேர முடியும் என்று கட்டளையிடுகிறார். இதனால் மனநல மருத்துவர் ரதிதேவியிடம் (சமந்தா) சிகிச்சைக்கு செல்ல ஒரு மாதம் சொந்த ஊருக்கு சென்று வந்தால் நற்சான்றிதழ் தருகிறேன் என்று அறிவுரை கூறி விஷாலை அனுப்பி வைக்கிறார். தந்தை, தங்கையை பார்க்க சொந்து ஊருக்கு செல்லும் கதிரவன்(விஷால்) கொஞ்சம் கொஞ்சமாக குடும்ப பாசத்தை உணர ஆரம்பிக்கிறார். தன் தங்கையின் காதல் திருமணத்தை நடத்தி வைக்க பத்து லட்சம் பணம் தேவைப்பட நிலத்தை விற்று நான்கு லட்சத்தை புரட்டும் விஷால் மீதிப் பணத்தை வங்கிக் கடன் வாங்க சென்னைக்கு வருகிறார்.

சில புகார்களால் ராணுவ வங்கியில் பணம் கிடைக்காமல் போக, தன் தந்தை மூலம் தனியார் வங்கியில் கடன் வாங்க முற்படும் போது பலவித காரணங்கள் சொல்லி நிராகரித்து விடுகின்றனர். இந்த சமயத்தில் தனியார் வங்கி வாசலில் தற்காலிகமாக கடை வைத்திருக்கும் புரோக்கர் போலி ஆவணங்கள் மூலம் 6 லட்சம் கடன் வாங்கி தருவதாக உறுதி அளிக்க இதற்கு விஷால் முதலில் மறுத்தாலும் பின்னர் தன் தங்கை திருமணம் தடைபடும் என்ற காரணத்தால் இதற்கு சம்மதிக்கிறார். தனியார் வங்கியில் கடன் கிடைக்க அதற்கான 10 சதவீத கமிஷன் அறுபதாயிரம் காசோலையை புரோக்கரிடம் கொடுத்து விட்டு செல்கிறார் கதிரவன்(விஷால்). இதனிடையே வங்கியில் போட்ட கதிரவனின் (விஷால்) ஆறு லட்சம் பணம் சில நாட்களில் கணக்கிலிருந்து மாயமாகிவிடுகிறது. இதனால் அதிர்ச்சியடையும் கதிரவன்(விஷால்) மோசடி மூலம் பெற்ற பணம் என்பதால் போலீசில் புகார் அளிக்க முடியாமல் தவிக்கிறார். இது போல் பல பேர் புரோக்கரால் பாதிக்கப்பட்டதை அறியும் கதிரவன்(விஷால்)இந்த கும்பலை பிடிக்க பலவிதங்களில் முயல்கிறார். அனைத்தும் தோல்வியில் முடிய இறுதியில் கதிரவன்(விஷால்) இந்த டிஜிட்டல் பண வர்த்தனை கும்பலின் சக்தி வாய்ந்த தலைவன் வைட் டெவிலை (அர்ஜுன்)கண்டுபிடித்தாரா? அனைவரின் பணத்தை மீட்டாரா? என்பதே இன்றைய காலகட்டத்தில் அவசியம் பார்க்க வேண்டிய கதைக்களம்.

மேஜர் கதிரவனாக அச்சு அசலாக ராணுவ அதிகாரியின் சாயலில் நடை உடை பாவனையில் கோபத்தின் உச்சத்தில் துவம்சம் பண்ணும் காட்சிகள் அதிரடி ஆக்ஷனில் கலக்கியிருக்கிறார். அதன் பின் மனோபாவத்தை மாற்றிக் கொள்ள எடுக்கும் முயற்சிகள், அன்பையும் பாசத்தையும் உணர்ந்து தன்னை திருத்திக் கொள்ள முயலும் போது எதிர்பாராத சம்பவங்களால் ஏற்படும் அதிர்ச்சி அதிலிருந்து மீண்டு வந்து துணிச்சலுடன் போராடி பெற்றி பெறும் சாமர்த்தியம் என்று ஒவ்வொரு காட்சியும் கனகச்சிதம் மட்டுமில்லாமல் வெற்றி நிச்சயம் என்பதை தன் நடிப்பால் ஊர்ஜிதம் செய்து அசத்தியிருக்கிறார்.

அர்ஜுன் அவரே ஆக்ஷன் கிங் பவர்புல் வில்லன் கேட்க வேண்டுமா இடைவேளைக்கு பின் இவரின் சூழ்ச்சிகள் பிரமிக்க வைத்து இறுதி வரை கெத்தான வில்லனாக மிரளச்செய்கிறார். இறுதிக்காட்சி இரண்டாம் பாகம் வரும் என்பதை ஊர்ஜிதப்படுத்துகிறது.

சமந்தா மனநல மருத்துவர் ரதி தேவியாக தன் பங்கை அமைதியாக, அடக்கமாக அழகாக வந்து அசத்தியிருக்கிறார்.

டெல்லி கணேஷ் விஷாலின் தந்தை ரங்கசாமியாக முதிர்ச்சியான யதார்த்தமான நடிப்பு முதலில் ஏமாற்றுப் பேர்வழியாக காட்டி பின்னர் அவரின் வெகுளித்தனமான பேச்சு, எதையும் காதில் வாங்கிக் கொள்ளாத குணம், மகன் குரலுக்கு அடங்கும் அப்பாவி அப்பாவாக, மகன் திட்டியதும் ஒடுங்கி அழும் காட்சிகள் பின்னர் தன் இயலாமையை விவரிக்கும் போது அப்லாஸ் அள்ளுகிறார்.
ரோபோ சங்கர் சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் கேரக்டர் ரோல் கச்சிதம்.

மற்றும் விஜய் வரதராஜ், சாண்டி, ஷியாம், சரத்ரவி, தர்ஷனா, அப்துல், வின்சன்ட் அசோகன், மதுசூதனன்ராவ், சுமன்,காளி வெங்கட், மாரிமுத்து, மகாநதி ஷங்கர், ஜெரிமி, பிரதீப் கே.விஜயன், சயத் இவர்களுடன் பலர் படத்திற்கு பலம் மட்டுமல்ல காட்சிகளை நகர்த்திச் செல்லும் தூண் என்றால் மிகையாகாது.

யுவன் ஷங்கர் ராஜாவின் அதிரடி இசையில் பாடல்கள் அனைத்தும் தெறிக்கிறது. பின்னணி இசை படத்தின் விறுவிறுப்புக்கு உத்தரவாதம்.

டிஜிட்டல் உலகத்தை கண் முன்னே காட்டி, நெளிவு சுளிவு சந்துகளை தன் காமிரா கோணங்களில் நேர்த்தியாக படம் பிடித்து, ஆக்ஷன் காட்சிகள், ராணுவ பயிற்சிகள், வங்கி மோசடிகளை தத்ரூபமாக உயிர் கொடுத்து, கிராமத்து ஏழிலையும் விட்டு வைக்காமல் அசத்தலாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்.

எம்.ஆர்.பொன்பார்த்திபன், சவரிமுத்து, ஆன்டனி பாக்யராஜ் ஆகியோரின் பன்ச் வசனங்கள் சிரிக்கவும் வைக்கிறது சிந்திக்கவும் வைக்கிறது.

விஷ_வல் தொழில்நுட்பம் படத்தின் விறுவிறுப்பை மேலும் மெருகேற்றி பிரமிக்க வைத்திருப்பதே படத்தின் வெற்றிக்கு அத்தாட்சி.

எழுத்து, இயக்கம்-பி.எஸ்.மித்ரன். ராணுவ சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ஏற்கனவே வந்த படத்தின் சாயல் இருந்தாலும் புதிய கோணத்தில் பிரதிபலித்து டிஜிட்டல் யுகத்தின் ஆபத்துகள் அபாயகரமானது என்பதை சிறப்பாகவும், தெளிவாகவும், புரியும்படியும் உணர்த்தி சமூதாய விழிப்புணர்ச்சியோடு பதிவு செய்து இன்றைய சூழலில் பண பரிவர்த்தனை ஏற்படுத்தும் பாதிப்புகள், மக்களை கடனாளியாக்கி, ஏமாற்று பேர்வழிகளாக சித்தரித்து குளிர் காயும் மோசடி கும்பலின் முகத்திரையை வெளிச்சம் போட்டு காட்டி சிந்திக்க வைத்து எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார் இயக்குனர் பி.எஸ்.மித்ரன். வெல்டன்.

மொத்தத்தில்  இரும்புத்திரை வெற்றி வசூலை எட்டிப் பிடிக்கும் எஃகு கோட்டை.

RATING *4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *