என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா திரை விமர்சனம்

என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா திரை விமர்சனம்

ராமலட்சுமி சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீஷா ஸ்ரீதர் லகடபாடி தயாரித்து சக்தி பிலிம் பேக்டரி வெளியீட்டில் வெளிவந்திருக்கும் படம் என் பெயர் சூர்யா… என் வீடு இந்தியா.
இதில் அல்லு அர்ஜுன், அனு இமானுவேல், அர்ஜுன், சரத்குமார், நதியா, பொம்மன் இரானி, சாருஹாசன், சாய்குமார், பிரதீப் ராவத், பொசானி கிருஷ்ண முரளி, ரவி காலே, ராவ் ரமேஷ், ஹரீஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனூப் சிங் ரத்தோட், சத்ய கிருஷ்ணன், விக்ரம் லகடபாடி ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் வி.வம்சி.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-ராஜீவ் ரவி, இசை-விஷால்-சேகர், படதொகுப்பு-கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ், நடனம்-வைபவி மெர்ச்சன்ட், சண்டை கோச்சா, ரவிவர்மா, பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷமன், பாடல்கள்-பா.விஜய், வசனம்-விஜய் பாலாஜி, நிழற்படம்-ஜீவன் ரெட்டி, இணை தயாரிப்பு-பி.வாசு,தயாரிப்பு வடிவமைப்பு-ராஜீவன், மக்கள் தொடர்பு-சுரேஷ் சந்திரா, ரேகா.
நாட்டுப்பற்றும் அதே சமயம் கோபமும், வீரமும் சேர்ந்த ராணுவ வீரர் அல்லு அர்ஜுன். நாட்டின் எல்லைக்கு சென்று பணி செய்ய வேண்டும் என்ற உயரிய லட்சியத்துடன் பணி செய்கிறார் அல்லு அர்ஜுன். தனக்கு சரியென பட்டதை கோபத்துடன் அணுகி சண்டை சச்சரவு சிக்கி எப்பொழுதும் பிரச்னையில் முடிவதால் ராணுவத்திலிருந்து பதவி நீக்கம் செய்யப்படுகிறார். அதன் பின் ராணுவ உயர் அதிகாரி கர்னல் பொம்மன் இரானி அல்லு அர்ஜுனை உலகின் பிரபல மனநல மருத்துவ பேராசிரியர் அர்ஜுனிடம் நற்சான்றிதழ் பெற்று வந்தால் தான் பணியில் சேர்த்து கொள்வேன் என்று கூறி அனுப்பி விடுகிறார். இளம் வயதில் தன் தந்தையிடம் சண்டை போட்டு வீட்டிலிருந்து வெளிவந்து ராணுவத்தில் சேர்ந்த அல்லு அர்ஜுன் ராணுவ லட்சியத்திற்காக கையெழுத்து வாங்க மீண்டும் தன் தந்தையிடம் செல்லும் நிலைக்கு தள்ளப்படுகிறார். இருபத்தொரு நாள் கோபத்தை அடக்கினால் கையெழுத்து போட்டுத் தருகிறேன் என்று தந்தை அர்ஜுன் சவால் விட, அதை ஏற்கிறார் அல்லு அர்ஜுன். அந்த இருபத்தொரு நாளில் தாதா சரத்குமாருடன் மோதல் எற்பட கோபமா, லட்சியமா? என்ற சடுகுடு சதிராட்டத்தில் வெற்றி பெற்றாரா அல்லு அர்ஜுன் என்பதே ஆக்ஷன் கலந்த மாஸ் படம்.
அல்லு அர்ஜுன்; ஸ்டைலீஷ் ஆக்டர் என்பதை மெய்பிக்கும் வகையில் சண்டை, காதல், மோதல்,நடனம், செண்டிமெண்ட் என்று அனைத்து காட்சிகளிலும் தன் இயல்பான, முரட்டுத்தனமான ஆனால் ரசிக்குப்படியான ஸ்டைலில் அசத்தியிருக்கிறார்.
அர்ஜுன் கண்டிப்பான தந்தையாக ஆனால் அமைதி பொங்கும் ஆரவாரமில்லாத நடிப்பு கை தட்டல் பெறுகிறது.
சரத்குமார் வில்லனாக வரும் கதாபாத்திரம் இன்னும் மெருகேற்றியிருக்கலாம்.
அனு இமானுவேல் கிளாமர் டால்லாக வந்து போகிறார். தாயாக நதியா சிறப்பான தோற்றம் மனதில் நிற்கிறது.
மற்றும் பொம்மன் இரானி, சாருஹாசன், சாய்குமார், பிரதீப் ராவத், பொசானி கிருஷ்ண முரளி, ரவி காலே, ராவ் ரமேஷ், ஹரீஷ் உத்தமன், வெண்ணிலா கிஷோர், அனூப் சிங் ரத்தோட், சத்ய கிருஷ்ணன், விக்ரம் லகடபாடி ஆகியோர் வலுவான கதாபாத்திரத்தில் பங்களிப்பை சிறப்புடன் செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-ராஜீவ் ரவி. இசை விஷால் சேகர் இரு துருவங்களாக இருந்து படத்தின் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்கள்.
வசனம்-விஜய் பாலாஜி. ராணுவ வீரரின் கோபம், லட்சியம், இயல்புத் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப வசனத்தை நறுக்கென்று வெளிப்படுத்தியிருக்கிறார் விஜய் பாலாஜி.பாராட்டுக்கள்.
எழுத்து, இயக்கம்-வி.வம்சி. அனல் பறக்கும் ஆக்ஷன் காட்சிகள், ராணுவ பயிற்சிகள், குடும்ப சென்டிமெண்ட், காதல் என்ற கதைக்களத்துடன் ஒரு சமூக அக்கறையுடன் கூடிய மெசேஜை விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதத்தில் தந்திருக்கிறார் இயக்குனர் வி.வம்சி.
மொத்தத்தில் என் பெயர் சூர்யா…என் வீடு இந்தியா தேசப்பற்றை வலியுறுத்தும் ஆக்ஷன் மசாலா கலந்த அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கொண்டாடும் கோடை திருவிழா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *