தியா என் கதை: உதவி இயக்குநர் குமுறல் பேட்டி!

தியா என் கதை: உதவி இயக்குநர் குமுறல் பேட்டி!

கடந்த வெள்ளியன்று உலகெங்கும் வெளியாகியுள்ள படம்  ’ தியா ’.  லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘கரு’. ஆனால் வேறு ஒரு தயாரிப்பாளர் இதே பெயரைத் தன் படத்திற்காக பதிவு செய்து வைத்திருந்ததால் பெயர் பிரச்சினை சர்ச்சையானது. உச்சநீதிமன்றம் வரையிலும்  சென்றது.

இடையில் தங்களுடைய பெயர் அதிலிருந்து வித்தியாசமானது என்பதைக் காட்ட படத்தின் தலைப்பை ‘லைகாவின் கரு’ என்றுகூட மாற்றினார்கள். ஆனால் நீதிமன்றம் இதற்கும் தடை விதித்துவிட்டது.

படத்தை வெளியிடும் நாள் நெருங்கிவிட்டதால், வேறு வழியில்லாமல் படத்தின் நாயகியான ‘தியா’வின் பெயரையே படத்தின் தலைப்பாகவும் மாற்றி வைத்து படத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மலையாள ‘பிரேமம்’ புகழ் சாய் பல்லவி நாயகியாக  நடித்திருக்கிறார்.  சில தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் நாக ஷவ்ரியா நாயகனாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜி, நிழல்கள் ரவி, ஜெய்குமார், ரேகா, சுஜிதா, குமாரவேல், டி.எம்.கார்த்திக், சந்தானபாரதி ,பேபி வெரோனிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – விஜய், தயாரிப்பு – லைகா புரொடெக்சன்ஸ் பிரைவேட் லிமிடெட், இசை – சி.எஸ்.சாம், ஒளிப்பதிவு – நீரவ் ஷா, படத் தொகுப்பு – ஆண்டனி, வசனம் – அஜயன் பாலா, பாடல்கள் – மதன் கார்க்கி.

“கருக் கலைப்பு செய்வது பாவச் செயல். அது எத்தகைய தருணத்தில் உருவான கருவாக இருந்தாலும் அதுவும் ஒரு உயிர்தான். அதை அழிப்பதும் கொலையே ” என்பதைச் சொல்கிறது  இத்திரைப்படம். கருவில் அழிந்த உயிர் 5 வயது பெண் குழந்தையாகி தன்னை அழித்தவர்களை எப்படிப் பழி வாங்குகிறது  என்பது தான் ‘தியா ‘படத்தின்  கதை.

இந்தப் படத்தின் கதை தன் கதை தான்  என்று குமுறலுடன் போர்க்கொடி உயர்த்தியுள்ளார் பொன்கே. சந்திரகுமார் என்கிற உதவி இயக்குநர்.

அவர் பேசும் போது , “எனக்குச் சொந்த ஊர் திருச்சி . நான் இயக்குநர் ராஜகுமாரன் அவர்களிடம் ‘திருமதி தமிழ்’ படத்தில் உதவி இயக்கு நராகப் பணியாற்றியிருக்கிறேன். ‘நாட்டாமை’யில் ஈரோடு செளந்தரில் தொடங்கி  பல இயக்குநர்களிடம் கதை விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறேன். இப்படிப்  பத்தாண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் போராடி வரும் உதவி இயக்குநர் நான் .

நான் எப்படிக் கதை சொல்வேன், எப்படிக்  காட்சிகள் சொல்வேன் என்று என்னிடம் பழகிய நண்பர்களுக்குத் தெரியும். எவ்வளவு திறமையும் தகுதியும் இருந்தாலும் சினிமாவில் நல்ல நேரம் என்று ஒன்று வர வேண்டும் அல்லவா? அப்படி எனக்கான நேரத்துக்காகக் காத்திருந்தேன். காலம் கனிந்து வந்தது . அன்பழகன் என்கிற ஒரு நண்பர் மூலம் தயாரிப்பாளர் தேடினேன். நண்பர் அன்பழகனிடம் என் படத்தின் கதையைக் கூறினேன். அவரும் இலங்கையிலிருந்து வரும் தயாரிப்பாளருக்குப் படம் பண்ணலாம் என்றார்.  தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொன்னதாகவும் அவர் படம் தயாரிக்கச் சம்மதம் சொல்லி விட்டதாகவும்  கூறியிருந்தார். படம் பற்றி முறையாகப் பேசி முன்பணம் வாங்க வேண்டியதுதான் பாக்கி. நம் நீண்ட நாள் கனவு நிறைவேறப் போகிறது  நாமும் இயக்குநர் ஆகப் போகிறோம் என்கிற எதிர்பார்ப்பு டனும் கனவுடனும் தயாரிப்பாளரைச் சந்திக்கும் தருணத்துக்காகத் தவமிருக்கத் தொடங்கிக் காத்திருந்தேன்.

என் படத்திற்கு  ‘குறி’ அல்லது ‘கரு’ அல்லது ‘சிசு ‘என்று மூன்று தலைப்புகளை வைத்து இருந்தேன். இந்தக் கதை என் நண்பர்கள் வட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.  இந்நிலை
யில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தினத்தந்தி நாளிதழ் பார்த்துவிட்டு நண்பர்கள் போன் செய்தார்கள். என்னப்பா உன் கதை அப்படியே ‘தியா’ என்கிற படமாக வந்திருக்கிறது. முழுக்கதையும் பேப்பரில் போட்டிருக்கிறது. நானும் பேப்பரைப்  படித்தேன். அது அப்படியே என் கதை. பதற்றம் தாங்கவில்லை எனக்கு . அப்படியே திரையரங்கம் போய் ‘தியா’ படத்தைப் பார்த்தேன். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அப்படியே என் கதை. சிலவற்றை மட்டும் மாற்றியிருந்தார்கள். நான் வீரியமாக வசனங்கள் வைத்திருப்பேன். இதில் அந்த 5 வயதுக் குழந்தை அதிகம் பேசாமல்  மாற்றியிருந்தார்கள்.

மற்றபடி தன்னைக் கருவிலேயே கொன்ற உறவினர் முதல் டாக்டர் கம்பவுண்டர் வரை கொல்வது என்கிற அடிப்படைக் கதை படத்தின் உயிரோட்டமான சாராம்சம் என்னுடையது .

படத்தில் வரும் பல காட்சிகள் நான் அமைத்த கதையில் வரும் காட்சிகளாகவே இருந்தன. இந்தக் கதை என் இயக்குநர் ராஜகுமாரன் உள்பட பல  நண்பர்களுக்குத் தெரியும்.
இந்த நிலையில் நான் செய்வது? நான் சில ஆண்டுகளாகப் பலரிடம் கூறி வந்தது , பலருக்கும் தெரிந்தது இப்போது அது படமாக வந்திருக்கிறது. இந்தக் கதையைப் பற்றி 2ஆண்டு களுக்கு முன்பே நண்பர்களிடம் பேசியது , அந்த நண்பர் அன்பழகனி டம் செல்போனில் பேசியவை எல்லாம் பதிவு செய்யப்பட்டு என்னிடம் உள்ளன. என்னிடம் தயாரான முழுத் திரைக்கதையும் உள்ளது. இந்தக் கதை என்னுடையது தான் என்று நிரூபிக்க எனக்குச்   சாட்சியாக இயக்குநர்  ராஜகுமாரன் உள்பட பல நண்பர்கள்  உள்ளனர் . எப்போது எங்கே அழைத்தாலும் வருவார்கள். எனக்கு ஒன்றும் வேண்டாம் ‘தியா ‘ஒரு திருட்டுக்கதை என்று உலகத்துக்குத் தெரிந்தால் போதும் “என்று குமுறலுடன் கூறி முடித்தார் சந்திரகுமார்.

தொடர்புக்கு: இணை இயக்குநர் சந்திரகுமார் :9710 89 2221

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *