மெர்குரி சினிமா விமர்சனம்

மெர்குரி சினிமா விமர்சனம்

பென் ஸ்டூடியோஸ்-ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ்; சார்பில் கார்த்திகேயன் சந்தானம்-ஜெயந்திலால் காடா தயாரிப்பில் வெளிவந்துள்ள படம் மெர்குரி.

இதில் பிரபுதேவா,இந்துஜா, சனந்த், தீபக் பரமேஷ், ஷஷான்க் புருஷோத்தமன் மற்றும் அனிஷ் பத்மன் சிறப்பு தோற்றத்தில் ரம்யா நப்பீசன்ஆகியோர் நடித்துள்ள படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-ஒளிப்பதிவு-திருநாவுக்கரசு, இசை- சந்தோஷ்; நாராயணன், படத்தொகுப்பு-விவேக் ஹர்ஷன், ஒலி வடிவமைப்பு-குணால் ராஜன், கலை-சதீஷ்குமார், சண்டை-அன்பு அறிவு, ஆடை-பிரவீன் ராஜா, மக்கள்தொடர்பு-நிகில்.

சனந்த், தீபக், ஷஷான்க், அனிஷ் மற்றும் இந்துஜா ஆகிய ஐந்து பேரும் கேட்கும் மற்றும் பேசும் திறன் இழந்த நண்பர்கள் ஹோப் பள்ளியின் அலுமினி விழாவிற்கு வந்து கலந்து கொள்கிறார்கள். பின்னர் இந்துஜாவின் பிறந்தநாளையும் அத்துடன் இந்துஜா-சனந்த் காதல் கைகூடியதையும் கொண்டாட மலைப்பிரதேசத்திற்கு இரவில் செல்கிறார்கள். அங்கே எதிர்பாராத விதமாக கண் தெரியாத பிரபுதேவா இவர்கள் சென்ற காரில் அடிபட்டு இறந்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியடையும் நண்பர்கள் ஐவரும் என்ன முடிவெடுத்தார்கள்? பிரவுதேவாவை என்ன செய்தார்கள்? நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக இறக்க காரணம் என்ன? இவர்களை பழி வாங்கியது யார்? என்பதே மீதிக்கதை.

கண் தெரியாத பிரபுதேவாவின் நடிப்பு அற்புதம். பாழடைந்த தொழிற்சாலையில் துரத்துவதாகட்டும், தன் கதையை கை அசைவிலேயே விவரிப்பதாகட்டும், இறுதிக் காட்சியில் கனத்த இதயத்தோடு விடைப்பெற்று செல்வதையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

காது கேளாத வாய் பேச முடியாத இந்துஜா முக்கியமான கதாபாத்திரத்தில் நண்பர்களுடன் மகிழ்ச்சியை கொண்டாடி, காதலனுக்காக பிரபுதேவாவுடன் மன்றாடும் இடத்திலும், மன்னிப்பு கேட்கும் காட்சியிலும் மனதில் நிற்கிறார்.

இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் ரம்யா நப்பீசன், சனந்த், தீபக் பரமேஷ், ஷஷான்க் புருஷோத்தமன் மற்றும் அனிஷ் பத்மன் நடிப்பு காது கேளாத வாய் பேசமுடியாத நண்பர்களாக அழுத்தமான, உணர்ச்சிபூர்வமான நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள்.
ஒளிப்பதிவு -திருநாவுக்கரசு. இரவுக் காட்சிகள் தத்ரூபமாக, எழில் கொஞ்சும் இயற்கை காட்சிகளோடு மனதை ஒன்றிடச் செய்வதோடு, தொழிற்சாலைக்குள் நடக்கும் சம்பவங்கள் மிரட்டும் வகையில் காட்சிக் கோணங்களை அமைத்து கை தட்டல் பெறுகிறார்.

இசை-சந்தோஷ் நாராயணன். மௌனப் படத்திற்கு ஏற்ற இசையியை கொடுத்து மிரளச் செய்கிறார்.

இயக்கம்-கார்த்திக் சுப்புராஜ். வசனமில்லாத மௌனப்படமாக 30 ஆண்டுகளுக்கு முன்பு கமல்ஹாசன் நடித்து வெளிவந்த பேசும் படம் போன்று மெர்குரி படத்தை காதல், திகில், த்ரில் கலந்து திடுக் திருப்பங்களுடன் மௌனப்படத்தை கொடுத்து, மௌனமே வலிமையான அலறல் என்பதை நிரூபித்திருக்கிறார். ரசாயன தொழிற்சாலையால் ஏற்பட்ட பாதிப்புகளை முன்னிலைப்படுத்தி சமூக அக்கறையோடு சிந்திக்க வைத்து கார்ப்பரேட் நிறுவங்களால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகளையும் மறைமுகமாக சுட்டிக் காட்டியிருக்கிறார்.  வெல்டன் கார்த்திக் சுப்புராஜ்.

மொத்தத்தில் இந்த கோடை வெயிலின் வெப்பத்தை தணிக்கும் த்ரில்லிங்கான சைலண்ட் கில்லர் இந்த மெர்குரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *