வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை பிரிவு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  உயர்தர சிகிச்சை பிரிவு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடப்பு நிதியாண்டில் சுமார் ரூ.50 கோடி மதிப்பில் உயர்தர சிகிச்சை பிரிவு மற்றும் அதிநவீன சிகிச்சை உபகரணங்கள் அமைக்கப்படவுள்ளது!

புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பிரிவு, தாய்ப்பால் சேமிப்பு வங்கியையும் மற்றும் அதிநவீன ரேடியோ ஃபிரிக்குவன்சி மருத்துவ கருவியையும் திறந்து வைத்து மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் பேச்சு!!

நேற்று  (20.04.2018) வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.1.45 கோடி மதிப்பில் நவீன கட்டில்கள், செயற்கை சுவாச கருவிகள் மற்றும் நவீன மருத்துவ கருவிகள் கொண்ட புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பிரிவும், ரூ.10 இலட்சம் மதிப்பில் வேலூர் மாவட்டத்தில் முதல் தாய்ப்பால் சேமிப்பு வங்கியையும், ரூ.8.50 இலட்சம் மதிப்பில் அதிநவீன ரேடியோ ஃபிரிக்குவன்சி மருத்துவ கருவியையும் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர், மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி மற்றும் மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர்.நீலோபர் கபில் ஆகியோர் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார்கள்.

இக்கூட்டத்தில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மருத்துவர் சி.விஜயபாஸ்கர் அவர்கள் பேசியதாவது:-

அரசு வேலூர் மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை மையத்தையும், வேலூர் மாவட்டத்தின் முதல் தாய்ப்பால் வங்கியையும் துவக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். தமிழ்நாடு மாநில அரசின் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் மாண்புமிகு பாரத  பிரதமரால் நாட்டிலேயே முதன்மையான மற்றும் முன்னோடியான செயல் திட்டங்களை கொண்ட துறை என்ற பாராட்டினை பெற்றுள்ளது. இதே போன்று உலக சுகாதார நிறுவனத் தலைவரும் தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறையின் முன்னேற்ற செயல்பாடுகளை மற்ற மாநிலங்களில் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இத்துறை சிறந்து வளங்குவதற்கு முக்கிய காரணம் மறைந்த மாண்புமிகு அம்மா அவர்கள் செயல்படுத்திய திட்டங்களே ஆகும். மாண்புமிகு அம்மா அவர்கள் நம்முடைய சுகாதாரத் துறையின் திட்டங்களையும் செயல்பாடுகளையும் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல் வளர்ந்த மேலை நாடுகளுடன் ஒப்பிட்டு அதுபோன்று தரமான உயர்வான சிகிச்சையை ஏழை எளிய மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அறிவுரைகளை பின்பற்றி அம்மாவின் அரசு எண்ணற்ற திட்டங்களை ஏழை மக்களுக்கு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

இதன் ஒரு அங்கமாக இன்று வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி புதுப்பிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவும் ((Paediatric Intensive Care Unit)), தாய்ப்பால் வங்கியும் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தாய்ப்பால் வங்கி தமிழகத்தில் மட்டும்தான் உள்ளது. இதுவரை தமிழகத்தில் 9 தாய்ப்பால் வங்கி துவங்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தைகளுக்கு தன்னுடைய தாயால் சில காரணங்களால் தாய்ப்பால் கொடுக்க முடியாவிட்டால் இந்த தாய்ப்பால் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ள மற்ற தாய்மார்களின் தாய்ப்பாலை கொடுக்க அக்குழந்தைகளின் உயிரினை காப்பாற்ற மாண்புமிகு அம்மா அவர்களால் உருவாக்கப்பட்ட மகத்தான திட்டமே தாய்ப்பால் வங்கி. இந்த வங்கியில் தாய்ப்பாலை 6 மாத காலம் வரை சேமித்து வைத்து பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு ஏற்படும் இருதய குறைபாடுகளை கண்டறிந்து ஒரு ரூபாய் கட்டணமின்றி அக்குழந்தைகளுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்படும் வகையில் வசதிகள் அரசு மருத்துவமனையில்  ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.6.5 கோடி மதிப்பில் அதிநவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கருவியும், இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ள ரூ.3.64 கோடி மதிப்பில் கேத் லேப், தமிழகத்திலேயே வேலூர் அரசு மருத்துவமனையில் அதிக அளவில் மாதத்திற்கு சுமார் 1200 குழந்தைகள் பிறப்பதினால் ரூ.12 கோடி மதிப்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிகிச்சை அளிக்க ஒருங்கிணைந்த மகப்பேறு பச்சிளம் குழந்தை சிகிச்சை மையமும், JICA திட்டத்தில் ரூ.14.71 கோடி மதிப்பில் எலும்பு சிகிச்சை கருவிகள், சி.டி.ஸ்கேன், மார்பக புற்றுநோய் கண்டறியும் மேமோகிராபி கருவி, நுண்துளை அறுவை சிகிச்சை கருவி மின்னணு ஊடுகதிர் கருவியும் (Digital XRay)), ரூ.6.57 கோடி மதிப்பில் தீக்காய சிகிச்சை மையமும், ரூ.1 கோடி மதிப்பில் பிறவிக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை ((DEIC) மையமும், ரூ.1 கோடி மதிப்பில் மாரடைப்பு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து முதலுதவி சிகிச்சையளிக்க மாரடைப்பு சிகிச்சை பரிவும் மிக விரைவில் துவங்கப்படவுள்ளது என்பதை இக்கூட்டத்தின் வாயிலாக  மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.

பின்னர் தீவிர சிகிச்சை நெறிமுறைகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு, 2017 ஆம் ஆண்டு இருதய அறுவை சிகிச்சை செய்து குணமடைந்த 229 குழந்தைகளுக்கும், குறை பிரசவத்திலும் எடை ஒரு கிலோவிற்கு குறைவாகவும் பிறந்த 46 குழந்தைகளுக்கும் அம்மா பரிசுகளையும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் வழங்கினார்கள்.

முன்னதாக ஓய்வு பெற்ற செவிலியர் கண்காணிப்பாளர் திருமதி.தேவகி அவர்களின் சொந்த முயற்சியில் அமைக்கப்பட்ட செவிலியர்களின் முன்னோடி கைவிளக்கேந்திய காரிகை ஃபிளாரன்ஸ் நைட்டீங்கேல் அம்மையாரின் திருவுருவ சிலையினை மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் திறந்து வைத்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ரவி (அரக்கோணம்), திரு.லோகநாதன்
(கீ.வ.குப்பம்), திரு.நந்தகுமார் (அணைக்கட்டு), திரு.கார்த்திகேயன் (வேலூர்), மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சி.அ.ராமன், இ.ஆ.ப., மருத்துவக் கல்வி இயக்குநர் மரு.எட்வின்ஜோ, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.சாந்தி மலர், ஆவின் பெருந்தலைவர் திரு.வேலழகன், முன்னாள் அமைச்சர் திரு.விஜய், மருத்துவர்கள், செவிலியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

Please follow and like us: